இஸ்லாத்தை
ஏற்று வாழும் பெண்களே! நீங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்து நடக்க வேண்டிய
முக்கியமான சில அறிவுரைகளை திருக்குர்ஆனும் நபிமொழிகளும் சொல்லுகின்றன. அவற்றை
தொகுத்துள்ளோம். அதன்படி நடக்க முயற்சி செய்யுங்கள்!
''இவ்வுலகம் முழுவதும் செல்வமாகும். இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் சிறந்தது நல்லொழுக்கமுள்ள பெண்ணாவாள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 2668
பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுங்கள்! தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!
அல்குர்ஆன் 24:31
பர்தா அணிந்து தான் வெளியே செல்லுங்கள்!
அவர்கள்
தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது
முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.
அல்குர்ஆன் 24:31
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது என்று கூறுவீராக! அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்
அல்குர்ஆன் 33:59
தன்னுடைய தலையில் ஒட்டகத் திமிலைப் போன்று (கொண்டையிட்டு) ஒய்யாரமாக, அரை குறை ஆடை அணிந்து, பிறரைக் கவரும் வண்ணம் (உடலழகைக் காட்டி) தளுக்கிக் கொண்டு செல்லும் பெண்கள் சுவர்க்கம் புக மாட்டார்கள். (ஐம்பது ஆண்டுகள் அல்லது) எவ்வளவு ஆண்டுகள் பயணம் செய்து அடையும் இடத்தில் (ஒருவன்) இருந்தாலும் அங்கு சுவர்க்கத்தின் நறுமணம் பெற்றுக் கொள்ளப்படும். ஆனால், இப்பெண்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 3971
கால்களில் ஒலி எழுப்பும் சலங்கைகள் அணிந்து வெளியில் செல்லாதீர்!
அவர்கள்
மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டு மென்பதற்காக தமது கால்களால் அடித்து
நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்!
இதனால் வெற்றியடைவீர்கள்.
அல்குர்ஆன் 24:31
ஐவேளைத் தொழுங்கள்!
நம்பிக்கை
கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை
ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும்
கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப் படுவார்கள்.
அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞான மிக்கவன்.
அல்குர்ஆன் 9:71
பள்ளிவாசலுக்குச்
செல்லும் போது வாசனைப் பொருட்களை பயன்படுத்தாதீர்! நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெண்களாகிய நீங்கள் பள்ளிவாசலுக்குச் செல்லும்போது நறுமணம் பூசாதீர்கள்!
நூல்: முஸ்லிம் 759
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பெண்களே) நீங்கள் இஷாத் தொழுகையில் கலந்து கொள்ள பள்ளிவாசலுக்குச் செல்லும் போது அந்த இரவில் நறுமணம் பூசிச் செல்லாதீர்கள்.
நூல்: முஸ்லிம் 758
தேவையில்லாமல் தெருக்களில் சுற்றித் திரியாதீர்!
உங்கள்
வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது
போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்!
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப் படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை
விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப் படுத்தவுமே அல்லாஹ்
நாடுகிறான்.
அல்குர்ஆன் 33:32,33
அந்நிய ஆண்களிடம் குழைந்து பேசாதீர்!
நபியின்
மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு)
அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான்.
அழகான கூற்றையே கூறுங்கள்.
அல்குர்ஆன் 33:32,33
அந்நிய ஆணுடன் தனித்து இருக்காதீர்!
ஒரு
பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம். (மண முடிக்கத் தகாத)
நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போதே தவிர. ஒரு பெண் மணமுடிக்கத் தகாத
நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 2611
உங்களில் எவரும் (அந்நியப்) பெண்ணுடன் தனித்து இருக்க வேண்டாம்! ஏனெனில் ஷைத்தான் உங்களில் இருவரில் மூன்றாம் நபராக இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: அஹ்மத் 109
ஒட்டு முடி வைக்காதீர்!
பச்சை
குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக் கொள்ளும் பெண்கள், முகத்தில்
முளைத்திருக்கும் முடிகளை அகற்றிக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால்
தேய்த்து, தம் முன்பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ் தந்த
உருவத்தை மாற்றிக் கொள்ள முயலும் பெண்கள் ஆகியோரின் மீது அல்லாஹ்வின் சாபம்
உண்டாகட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரீ 4886
ஒட்டு (முடியாலான சவுரி) வைத்துக் கொள்ளும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
நூல்: புகாரீ 4887
"என்
தந்தை (அபூ ஜுஹைஃபா(ரலி)) இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுப்பதைத் தொழிலாகக் கொண்ட
ஓர் அடிமையை விலைக்கு வாங்கி, அவரின் தொழிற் கருவிகளை உடைக்கும்படி
உத்தரவிட்டார்கள். அவ்வாறே, அவை உடைக்கப்பட்டன. அதுபற்றி நான் அவர்களிடம்
கேட்டபோது, 'நபி(ஸல்) அவர்கள் இரத்தத்தின் கிரயம் (இரத்தம் குத்தி, உறிஞ்சி
எடுப்பதற்காகப் பெறுகிற கூலி), நாயின் கிரயம், அடிமைப் பெண்ணின் சம்பாத்தியம்
ஆகியவற்றைத் தடுத்தார்கள். பச்சை குத்திக் கொள்பவளையும், பச்சை குத்தி
விடுபவளையும், வட்டி உண்பவனையும் (உயிரினங்களின்) உருவம் வரைபவனையும் சபித்தார்கள்!'
என்று பதிலளித்தார்கள்!"
அறிவிப்பவர் : அவ்ன் இப்னு அபீ ஜுஹைஃபா(ரஹ்)
ஸஹீஹுல் புகாரி 2086, 2238
”நபி (ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்து விடுபவளையும் ஒட்டுமுடி
வைத்துக் கொள்பவளையும் பச்சை குத்தி விடுபவளையும் பச்சை குத்திக் கொள்பவளையும்
சபித்தார்கள்.”
அறிவிப்பவர் : இப்னு உமர்
(ரலி)
நூல் : புகாரி 5940
அவதூறு சொல்ல வேண்டாம்!
நம்பிக்கை
கொண்ட வெகுளிகளான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும்
மறுமையிலும் சபிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு. அவர்களின்
நாவுகளும், கைகளும், கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து
சாட்சியமளிக்கும். அன்றைய தினம் அவர்களது உண்மையான கூலியை அவர் களுக்கு அல்லாஹ்
கொடுப்பான். அல்லாஹ் உண்மையானவன்; தெளிவுபடுத்தக்கூடியவன் என்பதை அவர்கள் அறிந்து
கொள்வார்கள். (அல்குர்ஆன் 24:23-25)
நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும், தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர்.
அல்குர்ஆன் 33:58
இணை வைக்காதீர்!
நபியே!
(முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து ''அல்லாஹ்வுக்கு எதையும் இணை
கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள்
குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக் கட்டி எந்த அவதூறையும் கூற
மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம்'' என்று உம்மிடம் உறுதி
மொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவ
மன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 60:12
லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது ''என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்'' என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக!
அல்குர்ஆன் 31:13
''நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர் மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!'' என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.
அல்குர்ஆன் 39:65
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடைசெய்துவிட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை'' என்றே மஸீஹ் கூறினார்.
அல்குர்ஆன் 5:72
படைத்தவனிடம் மட்டும் பிரார்த்தனை செய்யுங்கள்!
என்னைப்
பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ''நான் அருகில் இருக்கிறேன்.
பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப்
பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும்.
இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்'' (என்பதைக் கூறுவீராக!) அல்குர்ஆன் 2:186
''(முஹம்மதே!) நான் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்பதை எனது அடியார்களுக்குக் கூறுவீராக!
அல்குர்ஆன் 15:49
தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!
அல்குர்ஆன் 39:53
குழந்தைகளுக்கு மார்க்கத்தை கற்றுக் கொடுங்கள்!
ஒரு
பெண்மணி, தன் கணவனின் வீட்டாருக்கும் அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள்.
அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப் படுவாள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரீ 7138
மனிதன் இறந்து விட்டால் அவனுடைய அமல்கள் துண்டிக்கப் படுகின்றன. மூன்று விஷயங்களைத் தவிர. (அவை) 1. நிரந்தர தர்மம் 2. பயன் தரும் கல்வி 3. அவனுக்காக பிரார்த்தனை செய்யும் நல்ல குழந்தை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 3084
கேலி செய்ய வேண்டாம்! புறம் பேச வேண்டாம்!
நம்பிக்கை
கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட
அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய
வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள்
குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட
பின் பாவமான பெயர் (சூட்டுவது), கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி
இழைத்தவர்கள்.
நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 49:11,12
அதிகம் தர்மம் செய்வீர்!
நபி
(ஸல்) அவர்கள், ''பெண்கள் சமூகமே! தான தர்மம் செய்யுங்கள். ஏனெனில் நரகவாசிகளில்
அதிகமாக இருப்பது நீங்கள் தான்'' என்று கூறினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! ஏன்?''
என்று அப்பெண்கள் கேட்டனர். அதற்கு, ''நீங்கள் அதிகமாக சாபமிடுகிறீர்கள்.
கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள். மார்க்கக் கடமையும் அறிவும்
குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றி விடக்
கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரீ 304
''முஸ்லிம்
பெண்களே! (உங்களில்) எந்தப் பெண்ணும் தன் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் கால்
குளம்பை (அன்பளிப்பாக) அளித்தாலும் அதை அற்பமாகக் கருத வேண்டாம்'' என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரீ 2566