Thursday, July 3, 2014

தர்ஹா வழிபாடு/கப்ர் வணக்கம் சாபத்திற்குரிய செயல்!



தர்ஹா வழிபாடு/கப்ர் வணக்கம் கூடாது - குர்ஆன் தொகுப்பு

இறந்து போன அவ்லியாக்கள் தம் தேவைகளை நிறைவேற்றுகின்றனர், கஷ்டங்களையும், துன்பங்களையும் நீக்குகின்றனர் என்று நம்பி சிலர் அவர்களின் அடக்கஸ்தலம் சென்று அவர்களிடம் உதவி தேடுகின்றனர். பாதுகாப்புத் தேடுகின்றனர். (இவை அல்லாஹ்விடம் மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களாகும்)
  17:23
அல்லாஹ் கூறுகிறான்: 
“(நபியே!) உமது இறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக்கூடாதென்று (கட்டளையிட்டி ருப்பதுடன்)” தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். உங்களிடம் இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) "சீ" என்றும் சொல்ல வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுங்கள்.
பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்) 17:23

அதுபோல இறந்து போன நபிமார்கள் மற்றும் இதர நல்லடியார்களிடம் துன்பங்களை நீக்கவும், தங்களுக்கு இறைவனிடம் பரிந்துரை செய்யவும் வேண்டிப் பிரார்த்திக்கின்றனர். (இதுவும் இணைவைத்தல் ஆகும்)
27:62
அல்லாஹ் கூறுகிறான்:
“துன்பத்திற்குள்ளானவர் இறைஞ்சும்போது அவருக்குப் பதில் அளிப்பவன் யார்? மேலும் அவருடைய துன்பத்தை நீக்குபவன் யார்? மேலும் உங்களைப் பூமியில் பிரதிநிதிகளாய் ஆக்குகிறவன் யார்? (இப்பணிகளைச் செய்ய) அல்லாஹ்வுடன் வேறு இறைவன் உண்டா? நீங்கள் மிகக் குறைவாகவே சிந்திக்கின்றீர்கள்”
ஸூரத்துந் நம்லி (எறும்புகள்) 27:62

இன்னும் சிலர் நிற்கும் போதும், உட்காரும் போதும், கீழே விழும் போதும், அல்லது துன்பங்கள், துயரங்களில் மாட்டிக் கொள்ளும் போது தங்களுடைய ஷேக் அல்லது அவ்லியாக்களுடைய பெயரை திக்ராக உச்சரிக்கும் வழக்கமுடையவர்களாக உள்ளனர். யா முஹம்மத், யா அலீ, யா ஹுஸைன், யா முஹ்யுத்தீன், யா ஷாதுலி, யா ரிஃபாஈ என்றெல்லாம் கூறுகின்றனர்.
7:194
ஆனால் அல்லாஹ் கூறுகிறான்:
“நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை அவர்கள் அழைக்கின்றார்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடியார்களே! (உங்கள் கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள் என்று கூறுவதில்) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அவர்களை நீங்கள் அழைத்துப் பாருங்கள்; உங்களுக்கு அவர்கள் பதிலளிக்கட்டும்!”
ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) 7:194

சமாதிகளை வழிபடக்கூடியவர்களில் சிலர் அவற்றை வலம் வருகின்றனர். அவற்றின் மூலைகளையும், படிக்கட்டுகளையும் தொட்டு முத்தமிடுகின்றனர். மேனியில் தடவிக் கொள்கின்றனர். அங்குள்ள மணலை முகத்தில் பூசிக் கொள்கின்றனர். அவற்றுக்கு ஸஜ்தாவும் செய்கின்றனர். மேலும் அவற்றுக்கு முன் தாழ்ந்து, பணிந்து பயபக்தியுடன் நின்று நோய் குணமாகுதல், பிள்ளைப் பேறு கிடைத்தல், தங்களுடைய காரியங்கள் எளிதாகுதல் போன்ற தங்களுடைய நாட்டங்களையும் தேவைகளையும் கேட்கின்றனர். சிலபோது அவ்லியாவே! தலைவரே! நான் தொலை தூரத்திலிருந்து வந்திருக்கிறேன். என்னை ஏமாற்றி விடாதீர்கள் என்றும் கூறுகின்றனர்.
46:5
அல்லாஹ் கூறுகிறான்:
“அல்லாஹ்வை விடுத்து கியாமநாள் வரை தனக்கு பதிலளிக்க இயலாதவர்களை அழைப்பவர்களை விட மிக வழிகெட்டவர்கள் யார் இருக்க முடியும்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியாதவர்களாக இருக்கின் றார்கள்”
ஸூரத்துல் அஹ்காஃப் (மணல் திட்டுகள்) 46:5

அல்லாஹ்வை விடுத்து அவனுக்கு இணையாக ஒருவரைப் பிரார்த்தித்த நிலையில் எவன் இறந்து விடுகிறானோ அவன் நரகில் நுழைவான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி).
நூல்: புகாரி.

சிலர் சமாதிகளுக்குச் சென்று மொட்டை அடித்துக் கொள்கின்றனர். இன்னும் சிலர் அவ்லியாக்களின் அடக்கஸ்தலங்களை தரிசிப்பது சம்பந்தமாக ‘தர்ஹாக்களை ஹஜ் (?) செய்வது எப்படி?’ என்பது போன்ற தலைப்புகளில் புத்தகங்களே வைத்திருக்கிறார்கள். (அடக்கஸ்தலங்களை தரிசிப்பது என்னவோ அவர்களுக்கு ஹஜ் செய்வதைப் போல) மற்றும் சிலர், அவ்லியாக்கள் இவ்வுலகை நிர்வகித்து கொண்டிருக்கின்றார்கள். நன்மையோ, தீமையோ செய்ய அவர்களுக்கு ஆற்றல் இருக்கிறது என்று நம்புகிறார்கள்.
10:107
ஆனால் அல்லாஹ் கூறுகிறான்:
“அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது; அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை; தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் - அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான்.”
ஸூரத்து யூனுஸ் (நபி) 10:107

சிலைகள் மீதோ அல்லது அவதாரங்கள் மீதோ நம்பிக்கை இல்லாத முஸ்லிமகள் இறந்துபோன பெரியார்களை அதாவது அவ்லியாக்களை இறைவனுடைய நல்லடியார்கள் என்ற அடிப்படையிலே இறைவனை அவர்கள் நெருங்கச் செய்வார்கள் இறைவனிடம் தங்களுக்காக சிபாரிசு செய்வார்கள், எனவே அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுப்பதும் அவர்களுக்குறிய சடங்குகள் செய்வதும் இஸ்லாத்தில் உள்ளவைதான் என்ற நம்பிக்கை முஸ்லிம்களிடம் இருக்கிறது. அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வழிபாட்டை அல்லாஹ் அல்லாதவர்களுக்கு தர்ஹாக்களை கட்டி வைத்துக்கொண்டு சமாதி வழிபாடு செய்கின்றனர். ஆனால் அல்குர்ஆன் இறைவனுடய இறுதி வேதம் இதனை தெளிவாக மறுக்கிறது.
10:18
தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், “இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை” என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; “வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்” என்று கூறும்.
ஸூரத்து யூனுஸ் (நபி) 10:18
39:3

அல்லாஹ் கூறுகிறான்:
அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.
ஸூரத்துஜ்ஜுமர் (கூட்டங்கள்) 39:3
  
குர்ஆனில் அல்லாஹ் மிகத்தெளிவாக இறைவனுடைய அடியார்களை தங்களுக்கு சிபாரிசு செய்யக்கூடியவர்களாக தங்களை அல்லாஹ்வின்பால் நெருங்க செய்யக்கூடியவர்களாக யார் நம்புகிறார்களே அவர்களை அல்லாஹ் காஃபிர் எனக் கூறுகிறான். அதுமட்டுமல்ல

நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்.
18:102
18:103
18:104
அல்லாஹ் கூறுகிறான்:
நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்.  “(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான்.
ஸூரத்துல் கஹ்ஃபு (குகை) 18:102-104

நன்றாக நாம் புரிந்துகொள்ள வேண்டும் எந்த ஒரு கஷ்டத்திலும் பிரச்னையிலும் நாம் அல்லாஹ்விடம் தான் நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும். இறைவனும் அவனிடமே மட்டுமே உதவி தேடச் சொல்கிறான். 
2:186
 அல்லாஹ் கூறுகிறான்:
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.
ஸூரத்துல் பகரா (பசு மாடு) 2:186
40:60
அல்லாஹ் கூறுகிறான்:
உங்கள் இறைவன் கூறுகிறான்: “என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.” 
ஸூரத்துல் முஃமின் (ஈமான் கொண்டவர்) 40:60
35:22
அல்லாஹ் கூறுகிறான்:
உயிருள்ளவர்களும் மரணித்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர்களைச் செவியுறும்படிச் செய்கின்றான். (நபியே!) சமாதிகளில் உள்ளவர்களை செவியுறும்படிச் செய்ய உங்களால் முடியாது.
ஸூரத்து ஃபாத்திர் (படைப்பவன்) 35:22
 13:14
அல்லாஹ் கூறுகிறான்:
உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப் போரின் உதாரணம்;) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது; (இவன் அள்ளாது) அது வாயை அடைந்து விடாது - இன்னும் காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை.
ஸூரத்துர் ரஃது (இடி) 13:14
 35:14
அல்லாஹ் கூறுகிறான்:
நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியோற்கார்; செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள்; கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள். 
ஸூரத்து ஃபாத்திர் (படைப்பவன்) 35:14

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ‘நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்’ என்று அல்லாஹ் அல்குர்ஆன் 2:186 வசனத்தில் கூறுகின்றான்.
41:49
அல்லாஹ் கூறுகிறான்:
மனிதன் (நம்மிடம் பிரார்த்தனை செய்து) நல்லதைக் கேட்பதற்குச் சோர்வடைவதில்லை; ஆனால் அவனைக் கெடுதி தீண்டுமாயின் அவன் மனமுடைந்து நிராசையுள்ளவனாகின்றான்.
ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா 41:49


தர்ஹா வழிபாடு/கப்ர் வணக்கம் கூடாது - ஹதீஸ் தொகுப்பு

அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உடல் நலிவுற்று (தம் இறுதிநாட்களில்) இருந்த போது அவர்களிடம் மக்கள் பேசிக்கொண்டிருந்தனர். உம்முஹபீபா (ரலி), உம்முசலமா (ரலி) ஆகிய இருவரும் (அபிசீனிய ஹிஜ்ரத்தின் போது) அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப் படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவர்கள் எத்தகையோர் எனில்,) அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும்போது, அவருடைய சமாதியின் மீது வணக்கத்தலம் ஒன்றை நிறுவி அதில் அம்மாதிரியான உருவப்படங்களை பொறித்துவிடுவார்கள். அவர்கள்தாம் மறுமை நாளில் அல்லாஹவிடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள்" என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 918,919,920

உம்மு ஹபீபா(ரலி)வும் உம்மு ஸலமா(வும்) தாங்கள் அபீ ஸீனியாவில் கண்ட உருவங்கள் இடம் பெற்ற கோவிலைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி(ஸல்) 'அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரின் அடக்கத் தலத்தின் மேல் வண்ணக்கத்தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னிதியில் அவர்கள் தாம் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்களாவர்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரி 427, 434, 1341, 3873; முஸ்லிம் 822, நஸயீ 0704, அஹ்மத் 23731

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயிலிருந்து எழாமல் (இறந்து) போய்விட்டார்களோ அந்த நோயின்போது, "அல்லாஹ் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்கள் தங்களுடைய நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக்கொண்டார்கள்" என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது இந்த அறிவிப்பு (மட்டும்) இல்லாவிட்டால் நபியவர்களின் அடக்கத்தலம் (அனைவருக்கும் தெரியும்படி) வெளிப்பபடையாக அமைக்கப்பட்டிருக்கும். ஆயினும், அவர்களது அடக்கத்தலம் எங்கே வணக்கத்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என்று அஞ்சப்பட்டது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 921

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் யூதர்களைத் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்கள் தம் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 922,923

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (நோய் அதிகமாகி) இறப்பு நெருங்கிவிட்டபோது அவர்கள் தமது கறுப்புக் கம்பளி ஆடையைத் தமது முகத்தின் மீது போட்டுக் கொள்ளலானார்கள். அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்போது தமது முகத்திலிருந்து அதை அகற்றிவிடுவார்கள். அவர்கள் அதே நிலையில் இருந்துகொண்டே, "யூதர்கள்மீதும் கிறிஸ்தவர்கள்மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகுக! அவர்கள் தம் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்" என்று அவர்கள் செய்ததை(ப் போன்று நீங்களும் செய்துவிடக் கூடாது என அதை)க் குறித்து எச்சரித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)
நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 924

கப்ரை வணக்கத்தலமாக்குவது என்பதன் தெளிவான விளக்கத்தை மேற்கண்ட ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது. நல்லடியார்கள் மற்றும் நபிமார்கள் மரணித்த பின் அவர்களின் கப்ரை மகத்துவப்படுத்தி அதனைச் சுற்றிலும் கட்டடம் எழுப்பி அங்கு இறைவனுக்குச் செய்ய வேண்டிய வணக்கங்களைச் சமாதிகளுக்குச் செய்வது தான் கப்ரை வணக்க தலமாக்குவதாகும். இன்றைக்கு முஸ்லிம்களிடம் காணப்படும் தர்ஹா வழிபாடு யூத, கிறிஸ்தவர்களின் வழிமுறை தான் என்பதை மேற்கண்ட ஹதீஸ் நூறு சதவிகிதம் மெய்ப்படுத்துகின்றது. நீங்கள் உங்களுக்கு முன் வாழ்ந்த யூத, கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை முழத்துக் முழம், ஜானுக்கு ஜான் பின்பற்றுவீர்கள் என்ற நபியவர்களின் முன்னறிவிப்பையும் இது மெய்ப்படுத்துகிறது.

அல்லாஹ்வின் சாபம்

நபி (ஸல்) அவர்கள் மரண வேளை நெருங்கியபோது தங்களின் போர்வையைத் தங்களின் முகத்தின் மீது போடுபவர்களாகவும் மூச்சுத் திணறும்போது அதைத் தம் முகத்தைவிட்டு அகற்றுபவர்களாகவும் இருந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருக்கும்போது 'தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிய யூத கிறிஸ்தவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும்" எனக் கூறி அவர்களின் செய்கை பற்றி எச்சரித்தார்கள்.
அறிவிப்பாளர்கள்: ஆயிஷா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்: புகாரி 435-437; முஸ்லிம் 826, நஸயீ 2047, அபூதாவூத் 3227, அஹ்மத்

நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது, 'யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டனர்" என்று கூறினார்கள்.
பயம் மட்டும் இல்லையாயின் நபி (ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித் தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கஸ்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: ஸஹீஹுல் புகாரி 1330, 3454, 4441, 4444, 5816

நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் "உங்களில் ஒருவர் என் (தேவைகளுக்காக நான் அணுகும்) உற்ற தோழராக இருப்பதிலிருந்து (விலகி) நான் அல்லாஹ்வையே சார்ந்திருக்கிறேன். ஏனெனில், உயர்வுக்குரிய அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களை (தன்) உற்ற தோழராக ஆக்கிக்கொண்டதைப் போன்று என்னையும் (தன்) உற்ற தோழனாக ஆக்கிக்கொண்டான். நான் என் சமுதாயத்தாரில் ஒருவரை என் உற்ற தோழராக ஆக்கிக்கொள்வதாயிருந்தால் அபூபக்ர் அவர்களையே நான் என் உற்ற தோழராக ஆக்கிக்கொண்டிருப்பேன். அறிந்துகொள்ளுங்கள்: உங்களுக்கு முன்னிருந்த (சமுதாயத்த)வர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் சான்றோர்களின் அடக்கத் தலங்களை வழிபாட்டுத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். எச்சரிக்கை! நீங்கள் அடக்கத் தலங்களை வழிபாட்டுத்தலங்களாக ஆக்கிவிடாதீர்கள். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று உங்களுக்கு நான் தடை விதிக்கிறேன்" என்று கூறுவதை நான் கேட்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அறிவிப்பவர்: ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 925

நபியவர்கள் இவ்வாறு எச்சரிக்கை செய்ததன் காரணமாகத் தான் நபியவர்கள் மரணித்த பின் ஸஹாபாக்கள், நபியவர்களைப் பொது மையவாடியில் அடக்கம் செய்யாமல் நபியவர்களின் கப்ர் மக்களின் பார்வைக்கு வெளியே தெரியாத வண்ணம் ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டிலேயே அடக்கம் செய்தார்கள். இதனை ஆயிஷா (ரலி) அவர்களே   தெளிவுபடுத்துகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மரண நோயுற்றிருந்தபோது, 'யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களது மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டார்கள்' எனக் கூறினார்கள். இந்த பயம் மட்டும் இல்லாதிருந்தால் நபி (ஸல்) அவர்களின் கப்ரும் திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருக்கும். எனினும் நபி (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் பயந்தே உள்ளார்கள்; அல்லது அவர்களின் கப்ரும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டு விடும் என்ற பயம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: ஸஹீஹுல் புகாரி 1390

நபியவர்களின் கப்ர் திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருந்தால் அந்தக் கப்ரை மையமாக வைத்து அதற்கு பணிதல். அந்தச் சமாதியைச் சுற்றியுள்ள இடங்களைப் புனிதமாகக் கருதுதல், சமாதியில் பிரார்த்தனை செய்தல் போன்ற காரியங்கள் அதில் நடத்தப்பட்டு அதனை வணக்கத்தலமாக ஆக்கி விடுவார்கள் என்ற பயத்தில் தான் நபியவர்களின் கப்ர் மக்கள் சென்று வரும் வகையில் திறந்த வெளியில் அமைக்கப்படவில்லை. இன்றளவும் நபியவர்களின் கப்ரை அது வணக்கத்தலமாக மாறிவிடாமல் அல்லாஹ் பாதுகாத்து வருகின்றான். நபியவர்களின் சமாதியை நோக்கி மார்க்கத்தை அறியாத ஒருவன் கையேந்தி விட்டால் காவலர்களின் கைத்தடிகள் அவனைப் பதம் பார்த்து விடும்.

"இறைவா! என்னுடைய கப்ரை வணங்கப்படும் விக்கிரகமாக மாற்றி விடாதே! என்னுடைய கப்ரை திருவிழா கொண்டாடும் இடமாக மாற்றி விடாதீர்கள்'' என்ற நபியவர்களின் பிரார்த்தனையையும் ஆசையையும் அல்லாஹ் நிறைவேற்றி வருகிறான் என்பதற்கு இது நிதர்சனமான சான்றாகும்.

கப்ரைக் கட்டுவதும் பூசுவதும் கூடாது

இறைவனைப் பயந்து, பணிந்து வழிபடக் கூடிய காரியங்களைச் செய்வதற்காகவும், இறைவனுடைய பெயர்களை எல்லா நேரங்களிலும் திக்ர் செய்வதற்காகவும், பிரார்த்தனை செய்வதற்காவும் ஏற்படுத்தப்படும் ஆலயமே பள்ளிவாசலாகும். இது போன்ற நோக்கத்தில் அல்லாஹ் விற்காக மட்டுமே ஆலயங்கள் எழுப்பப்பட வேண்டும். வேறு யாருக்காகவும் இது போன்ற ஆலயங்கள் எழுப்பப்படுவது கூடாது. அப்படியென்றால் இது போன்ற நோக்கமில்லாமல் சாதாரணமாக ஒரு கப்ரின் மீது கட்டடத்தைக் கட்டலாமா? என்ற கேள்வி நம்மிடம் எழலாம். இது போன்ற நோக்கமில்லாமல் ஒரு கட்டடத்தைக் கட்டினாலும் அது பிற்காலங்களில் கப்ரை பள்ளிவாசலாக எடுத்துக் கொள்ளக்கூடிய நிலைமைக்குக் கொண்டு சென்று விடலாம். இதன் காரணமாகத் தான் நபியவர்கள் எந்த நிலையிலும் சாதாரணமாகக் கூட கப்ரைப் பூசுவதையோ அதன் மீது கட்டடம் கட்டுவதையோ தடை செய்துள்ளார்கள்.

கப்றுகள் காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசப்படுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 1765

சாதாரணமாக கப்ருகள் எவ்வாறு இருக்க வேண்டுமோ அதற்கு மாற்றமாக மிக உயரமாக இருந்தால் கூட அதை நபியவர்கள் உடைத்தெறியுமாறு கட்டளையிட்டுள்ளார்கள்.

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "எந்த உருவப் படங்களையும் நீ அழிக்காமல் விடாதீர்!" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்)
நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 1764

நபியவர்களின் பார்வையில் சமாதிகள்

கப்ருகள் ஒரு போதும் வணக்கத்தலமாக மாறிவிடக் கூடாது என்பதை நபியவர்கள் தன்னுடைய உம்மத்திற்குப் பலவிதங்களில் தெளிவு படுத்தியுள்ளார்கள். இறைவனுக்காகக் கட்டப்பட்ட பள்ளிவாசல்களை அருள் நிறைந்த இடமாகவும், வணக்க வழிபாடுகளைச் செய்வதற்குரிய இடமாகவும் வழிகாட்டிய நபியவர்கள் சமாதிகளைப் பாழடைந்த இடமாகவும், வணக்க வழிபாடுகளைச் செய்யக்கூடாத இடமாகவுமே நமக்கு வழிகாட்டி யுள்ளார்கள். பின்வரும் ஹதீஸ்களிலிருந்து இதனை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுடைய இல்லங்களிலும் உங்கள் தொழுகைகளில் சிலவற்றைத் தொழுங்கள். இல்லங்களை (தொழுகை நடைபெறாத) சவக்குழிகளாக ஆக்கிவிடாதீர்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 1426

உங்கள் இல்லங்களிலும் சில தொழுகைகளைத் தொழுங்கள்! அவற்றை அடக்கஸ்தலங்களாக ஆக்கி விடாதீர்கள்!
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: ஸஹீஹுல் புகாரி 432

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக்குழிகளாக ஆக்கிவிடாதீர்கள். "அல்பகரா" எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஒதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடிவிடுகிறான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 1430

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அடக்கத்தலங்கள் (கப்று)மீது உட்காராதீர்கள்; அவற்றை நோக்கித் தொழாதீர்கள்.
அறிவிப்பவர்: அபூமர்ஸத் கன்னாஸ் பின் அல் ஹுஸைன் அல்ஃகனவீ (ரலி)
நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 1768, 1769

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகம் முழுவதும் தொழுமிடமும் தூய்மையானதுமாகும். மண்ணறையையும் குளியலறையையும் தவிர.
அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி)
நூல்: அஹ்மத் 11801

அடக்கத்தலத்தில் விழா எடுக்க கூடாது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் வீடுகளை கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள். எனது கப்ரை(கந்தூரி) விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள். என் மீது ஸலவாத்து கூறுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடைய ஸலவாத் என்னை வந்தடையும்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: அபூ தாவூத் 1746

மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நபியவர்கள் சமாதிகளை, தொழுதல், ஓதுதல் போன்ற நற்காரியங்கள் செய்வதற்குத் தகாத இடமாகவே நமக்கு வழிகாட்டியுள்ளார்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.

சபிக்கப்பட்ட பெண்கள்

பெண்கள் கப்ருஸ்தான்களுக்குச் செல்வதை பெருமானார் (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டிக்கிறார்கள். தர்காக்களுக்குப் பெண்கள் அறவே செல்லக் கூடாது. ஏனெனில் தர்காக்களும் கப்ருஸ்தான்கள் தான்.

கப்ருகளை அதிகம் ஜியாரத் செய்யக்கூடிய பெண்களை நபியவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதி 976, இப்னுமாஜா, அஹ்மத், மற்றும் இப்னு ஹிப்பான்

நபி (ஸல்) அவர்களின் பிராத்தனை

இறைவா! எனது அடக்கத் தலத்தை வணக்கத் தலமாக ஆக்கி விடாதே என்று நபிகள் நாயகம் (ஸல்) பிரார்த்தனை செய்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
நூல்: முஸ்னத் அல் ஹுமைதி

சமாதிகளில் போய் கோழி, ஆடு, மாடுகளை அறுத்துப் பலியிட கூடாது

எனவே உமது இறைவனைத் தொழுது, அவனுக்காக அறுப்பீராக!
(அல்குர்ஆன் 108:2)

இந்த வசனத்தில் இறைவனுக்காக மட்டுமே தொழ வேண்டும். அவனுக்காக மட்டுமே அறுத்துப் பலியிட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். தொழுகையை வணக்கம் என்று அனைவரும் அறிந்திருப்பதால் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்காகவும் தொழுவதில்லை. ஆனால், அறுத்துப் பலியிடுவதை வணக்கம் என்று அறியாத காரணத்தினால் இறைவனல்லாதவர்களுக்காக அறுத்துப் பலியிடுகின்றனர். இத்தகையோருக்கு இந்த வசனத்தில் சரியான விளக்கம் அமைந்துள்ளது.

'யார் அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்காக அறுக்கின்றானோ, அவனை அல்லாஹ் சபிக்கிறான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: முஸ்லிம்

'புவானா என்ற இடத்தில் அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடுவதாக நான் நேர்ச்சை செய்து விட்டேன். அதை நான் செய்யலாமா' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அந்த இடத்தில் மற்றவர்களால் வழிபாடு நடத்தப்படும் தெய்வங்கள் உள்ளனவா? என்று கேட்டார்கள். நான் 'இல்லை' என்றேன். 'அது மற்றவர்கள் திருவிழாக்கள் நடத்தும் இடமா?' என்று கேட்டார்கள். நான் 'இல்லை' என்றேன். 'அப்படியானால் உமது நேர்ச்சையை நிறைவேற்றுவீராக' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி)
நூல்கள்: அபூதாவூத், பைஹகீ

அல்லாஹ்வுக்கு அறுத்துப் பலியிட நேர்ச்சை செய்தால் கூட மற்ற வழிபாடுகள் நடக்கும் இடத்தில் அதைச் செய்யக் கூடாது. சந்தேகத்தின் சாயல் கூடப் படியக் கூடாது என்றால் சமாதிகளில் போய் கோழி, ஆடு, மாடுகளை அறுத்துப் பலியிடுவோர் தங்களின் நிலை என்னவாகும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பிரார்த்தணை பற்றி இஸ்லாம்

இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்: 'நான் என்னுடைய இரட்சகனிடம் பிரார்த்தனை செய்தேன்; ஆனால் அவன் அதற்கு பதிலளிக்கவில்லை' என்று கூறி நீங்கள் அவசரப்படாதவரை உங்கள் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும்.
அறிவிப்பவர்:அபூ ஹுரைரா(ரலி)
நூல்: ஸஹீஹுல் புகாரி 6340

ஆனால், பிரார்த்தித்து அது நிறைவேறவே இல்லை என்றால்... மறு உலகில் நன்மையாக அது நம்மை வந்தடையும். இவ்வுலகில் அது நமக்கு இல்லாமல் இருப்பதையே இறைவன் விரும்பி இருக்கிறான் என்று பொறுமையாக அமைதியாக இருக்க வேண்டும்.

எவர்கள், (மறுமையைப் புறக்கணித்து விட்டு) இம்மையை மட்டும் விரும்புகிறார்களோ அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடியதை இம்மையிலேயே கொடுத்து விடுகிறோம். பின்னர், மறுமையில் நரகத்தைத்தான் அவர்களுக்கு தயார்படுத்தி வைத்திருக்கிறோம். அவர்கள் நிந்திக்கப்பட்டவர்களாகவும், சபிக்கப்பட்டவர்களாகவும் அதில் நுழைவார்கள்.
பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்) 17:18

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள்

No comments:

Post a Comment

நரகத்தில் நுழையும் முதல் 3 அணியினர்

(ஒருமுறை) அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் மக்கள் (கூடி, அவை) கலைந்தபோது, சிரியாவாசியான நாத்தில் பின் கைஸ் என்பவர், "பெரியவரே! அல்லாஹ்...