Thursday, July 10, 2014

புறம் பேசுதல்! நாவைப் பேணுவோம்! அவதூறு கூறுதல்!


புறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும், மறுமையிலும் மிகக் கொடிய தண்டனைகளைப் பெற்றுத் தரும் மிக மிக தீய செயலான புறம் பேசுவதை விட்டும் முஃமினான ஒருவர் அவசியம் தவிர்த்திருக்க வேண்டும்.

ஒருவர் புறம் பேசுவதை விட்டும் தவிர்ந்திருக்க வேண்டுமெனில், முதலில் அவர், புறம் பேசுதல் என்றால் என்ன? அதனால் ஏற்படும் தீமைகள் என்ன? புறம் பேசும் ஒருவனுக்கு இம்மை மற்றும் மறுமையில் கிடைக்கும் தண்டனைகள் யாவை? என்பதை அறிந்துக் கொள்வாராயின், இன்ஷா அல்லாஹ் அவர் அந்த தீயசெயலிளிருந்து தவிர்ந்து இருப்பார்.

புறம் பேசுவது பெரும்பாவமாகும்!
புறம் பேசுவது பெரும்பாவங்களில் ஒன்றாகும். தொழுகை, நோன்பு, ஜக்காத் இதர நல்லமல்கள் ஒன்றுமே இதற்கு ஈடாகாது! ஒரு மனிதன் வெறுக்கக்கூடிய எதனைப் பற்றிக் குறிப்பிட்டாலும் அது புறம்பேசுவதே ஆகும். உதாரணமாக, குள்ளன், நெட்டையன், குருடன், செவிடன் போன்ற உடல் சார்ந்த அனைத்துமே இதில் அடங்கும். ஒருவனைப் பற்றி அவன் அவ்விடத்தில் இல்லாமல் இருக்கும் போது, அவன் பித்அத்வாதி என்றோ அல்லது தொழாதவன் என்றோ குறிப்பிடுவதும் இதில் அடங்கும். இதனால் தான் நபி (ஸல்) அவர்கள், ‘நீ கூறுவது அவனில் இருந்தால் அது புறம் பேசுவதாகும்’ என்று கூறினார்கள். இவ்வாறு ஒருவரது குறையை மற்றவர்களிடத்தில் பேசுவது தான் புறம் பேசுதலாகும். அவ்வாறு பேசப்படுகின்ற குறைகள் குறிப்பிட்ட அந்த மனிதரிடம் இல்லையென்றால் அது அவனைப் பற்றிக் கூறிய அவதூறு / இட்டுக்கட்டாகும்.

புறம் பேசுதல் என்றால் என்ன?
புறம் என்றால் என்னவென நபி(ஸல்)அவர்கள் விவரிக்கின்றார்கள்: -
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "புறம் பேசுதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக் கூறுவதாகும்" என்று பதிலளித்தார்கள். அப்போது, "நான் சொல்லும் குறை என் சகோதரரிடம் இருந்தாலுமா? (புறம் பேசுதலாக ஆகும்), கூறுங்கள்" என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் சொல்லும் குறை உம்முடைய சகோதரரிடம் இருந்தால்தான், நீர் அவரைப் பற்றிப் புறம் பேசினீர் என்றாகும். நீர் சொன்ன குறை அவரிடம் இல்லாவிட்டாலோ, நீர் அவரைப் பற்றி அவதூறு சொன்னவராவீர்" என்று கூறினார்கள். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), 
நூல்: முஸ்லிம் 5048

புறம்பேசுதல் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட (ஹராமான) செயலாகும்:-
49:12
அல்லாஹ் கூறுகிறான்:-
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.
ஸூரத்துல் ஹுஜுராத் (அறைகள்) 49:12

குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.
ஸூரத்துல் ஹுமஜா (புறங்கூறல்) 104:1

பிறரைக் கேலி செய்யும் விதத்தில் பேசக் கூடாது: -
49:11
முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள். 
ஸூரத்துல் ஹுஜுராத் (அறைகள்) 49:11


இந்த அல்-குர்ஆன் வசனத்திற்கும் புறத்திற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது? ஏன் அல்லாஹ் மரணித்த சகோதரனின் இறைச்சியை புசிப்பதை புறம் பேசுவதோடு ஒப்பிடவேண்டும்?

ஒரு மனிதன் பிறிதொருவனைப் பற்றி அவன் அங்கில்லாத போது குறை கூறுகின்றபோது குறை கூறப்படுகின்ற மனிதனால் நிச்சயமாக அதைத் தடுக்க இயலாது. இதே போன்று தான் மரணித்த ஒருவரின் மாமிசத்தை வெட்டும் போதும் மரணித்தவனால் அதனை தடுக்கமுடியாது! புறம் பேசுவதும் இதே போன்று ஒரு கொடுமையான செயல் என்பதை நாம் விளங்க முடியும். மேலும் வசனத்தின் இறுதியில் அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள் என அல்லாஹ் கூறுகின்றான். இதன் மூலம், பிறரின் குறைகளை கூறி புறம்பேசுவதை விட்டும் அல்லாஹ்விற்கு அஞ்சிக்கொள்ள வேண்டும். இவ்வாறு குறை கூறி இருந்தால் இத்தகைய பெரும்பாவத்திலிருந்து மீண்டு வந்து தவ்பா செய்ய வேண்டும் என்பதை இவ்வசனம் போதிக்கின்றது.

ஒரு முஸ்லிம், பிற முஸ்லிமின் கண்ணியத்தைக் குழைக்கும் வகையில் புறம் பேசக் கூடாது:-
“ஒவ்வொரு முஸ்லிமும் பிற முஸ்லிமின் மீது அவருடைய இரத்தம், கண்ணியம், பொருள் இவற்றை களங்கப்படுத்துவது ஹராமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)

ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தமது உரையின் போது, “உள்ளத்தில் இல்லாது உதட்டால் நம்பிக்கை கொண்டவர்களே! முஸ்லிம்களைப் பற்றியும் புறம் பேசாதீர்கள்; அவர்களது குறைகளை ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; யார் மற்றவர்களின் குறைகளைத் தேடி திரிகின்றாரோ, அவர்களது குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிப்பான். யாருடைய குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிக்கின்றானோ அவர்கள் தமது வீட்டில் செய்யும் குறைகளையும் பகிரங்கமாக்கி அவர்களை இழிவுபடுத்தி விடுவான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல்: அஹ்மத்)

புறம் பேசுவதால் இம்மையில் ஏற்படும் தீமைகள்:-
1) புறம் பேசுவதன் மூலம் குடும்பங்களுக்கிடையே, உறவினர்களுக்கிடையே சண்டை, சச்சரவுகள், தகராறுகள் ஏற்படுகிறது.
2) ஒரு சபையில் பிறரைப் பற்றிப் புறம் பேசப்படும் போது, அது சமுதாயங்களுக்கிடையே பிளவை உண்டாக்குகிறது.
3) சமுதாயம் பிளவு படுவதன் மூலம் முஸ்லிம்களிடையே பலபிரிவுகள் ஏற்பட்டு, முஸ்லிம் சமுதாயம் பலவீண மடைகிறது.
4, முஸ்லிம் சமுதாயம் பலவீணமடைவதால் எதிரிகளால் ஆக்ரமிக்கப்பட்டு ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் பாதிப்படைகிறது.

புறம் பேசுவதால் மரணததிற்குப்பிறகு கப்ரிலும், மறுமையிலும் கிடைக்கும் தண்டனைகள்: -
கப்ரில் கிடைக்கும் தண்டனைகள்: -
நபி(ஸல்) அவர்கள் மக்கா அல்லது மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்தபோது, கப்ரில் வேதனை செய்யப்படும் இரண்டு மனிதர்களின் சப்தத்தைச் செவியுற்றார்கள். அப்போது, 'இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை" என்று சொல்லிவிட்டு, 'இருப்பினும் (அது பெரிய விஷயம்தான்) அவ்விருவரில் ஒருவர், தாம் சிறு நீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்' என்று கூறிவிட்டு ஒரு பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் 'நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?' என்று கேட்கப்பட்டதற்கு, 'அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் 
அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ்(ரலி)
நூல்: புஹாரி 216,218

மறுமையில் கிடைக்கும் தண்டனைகள்: -
1) மனித மாமிசத்தை சாப்பிடுவார்கள்: -
“மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு இரும்பினாலான நகங்கள் இருந்தன. அவர்கள் அதன் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும் நெஞ்சங்களையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது “ஜிப்ரீலே, அவர்கள் யார்” என்று கேட்டேன். “இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள் (புறம் பேசியவர்கள்) மனிதர்களின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள்” என்று விளக்கமளித்தார்கள்.” 
அறிவிப்பாளர் அனஸ் (ரலி)
நூல்;: அஹ்மது, அபூதாவூத் 

2) புறம் பேசுபவன் சுவனம் நுழையமாட்டான்: -
“புறம் பேசுபவன் சுவனம் நுழைய மாட்டான்” என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் (நூல்-முஸ்லிம்)

3) மறுமையில் ஒன்றுமே ஈடாகாது
நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடத்தில், ‘உங்களில் நஷ்டவாளி யார் என்று தெரியுமா? என்று கேட்டார்கள். (அதற்கு அவர்கள்) ‘எங்களில் (எவர்களிடத்தில்) தீனாரும் உலகத்தில் வாழ்வதற்கு வசதிவாய்ப்பும் இல்லையோ அவர்களே நஷ்டவாளி என்று குறிப்பிட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘மறுமை நாளில் ஒரு மனிதன் தொழுகை, நோன்பு, ஜக்காத் போன்ற நல்லறங்களுடன் வருவான். ஆனால் பலர் வந்து, ‘இவன் என்னை ஏசியவன், நான் செய்யாத விஷயத்தை என் மீது சுமத்தியவன், எனது செல்வத்தை சாப்பிட்டவன், இரத்தங்கள் ஓட்டியவன், அடித்தவன் என்றெல்லாம் அவனுக்கு எதிராக மனிதர்கள் முறையீடு செய்வார்கள். அப்போது அவன் இவ்வுலகில் செய்த நல்லமல்களை எடுத்து அவர்களுக்கு கொடுக்கப்படும். நல்லமல்கள் முடிந்த பிறகு அவர்களின் தீமைகளிலிருந்து எடுக்கப்பட்டு இம்மனிதனுக்கு கொடுக்கப்படும். இவ்வாறு அவன் நரகத்திற்கு நுழைவிக்கப்படுவான். (ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)

முஃமினான என தருமை சகோதர, சகோதரிகளே! அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களினால் இந்த அளவிற்கு கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ள இந்த புறம் பேசுதல் என்ற தீயசெயலை நாம் ஒவ்வொருவரும் தவிர்ந்திருப்பது மிக மிக அவசியமாகும்.

புறம் பேசுவதைத் தவிர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள்: -
ஒருவர் புறம் பேசுவதன் தீமைகளை அறிந்து அதைத் தவிர்ந்தவர்களாக, யாரைப் பற்றிப் புறம் பேசினார்களோ அவரிடம் மன்னிப்புக் கோரவேண்டும். பின்னர் மனந்திருந்தியவராக அழுது மன்றாடி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரவேண்டும்.
39:53
39:54
அல்லாஹ் கூறுகிறான்:-
“என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம்; நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான்; நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்’ (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.
ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்து விட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்”. 
ஸூரத்துஜ்ஜுமர் (கூட்டங்கள்) 39:53-54
6:54
“நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், ‘ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)’ என்று (நபியே!) நீர் கூறும், உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப் பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான். 
ஸூரத்துல் அன்ஆம் (ஆடு, மாடு, ஒட்டகம்) 6:54

எனவே சகோதர, சகோதரிகளே நாம் மனந்திருந்தியவர்களாக, இனி எக்காரணத்தை கொண்டும், யாரைப்பற்றியும், புறம் பேச மாட்டேன்! ஒருவரின் கண்ணியத்தைக் குழைக்கும் விதத்தில் நடந்து கொள்ள மாட்டேன்! என்று உறுதி பூண்டவராக, செயல்பட்டு, அந்த உறுதியில் நிலைத்திருப்பாராயின் அதனால் அளப்பறிய நன்மைகள் அவருக்கு கிட்டும்.

நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்: -
“எவரின் நாவாலும், கைகளாலும் முஸ்லிம்கள் பாதுகாப்புடன் இருக்கின்றாரோ அவரே உண்மையான முஸ்லிம் ஆவார். 
அறிவிப்பவர்: அப்துல்லா பின் அம்ர் (ரழி) 
நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத்.

“எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாக பயன்படுத்த பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு சொர்க்கத்திற்க்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்-புகாரி)

மேலும் நாம் அமர்திருக்கின்ற ஒரு சபையில் நம்முடைய சகோதர, சகோதரியைப் பற்றிப் புறம் பேசப்படுமானால், நாமும் அவர்களுடன் சேர்ந்து அந்தப் பாவத்தில் சிக்கி உழலாமல் எந்த சகோதர, சகோதரியைப் பற்றிப் பேசப்படுகிறதோ அவருடைய கண்ணியத்தைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்! இதை நபி (ஸல்) அவர்களும் வரவேற்றுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
தனது சகோதரனுடைய கண்ணியத்திற்கு இழுக்கு விளைவிப்பதை தடுப்பவரின் முகத்தை மறுமை நாளில் நரக நெருப்பை விட்டும் அல்லாஹ் தடுத்து விடுவான். 
அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி) 
நூல்: அஹமத்)

அல்லாஹ் நம் அனைவரையும் புறம் பேசுதல் என்னும் தீய செயலிலிருந்து காப்பாற்றி அதைத் தடுக்க கூடிய மற்றும் நற்செயல்கள் புரிபவர்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாகவும்.




நாவைப் பேணுவோம்!

படைப்பினங்களிலே மிகச் சிறந்த படைப்பாக அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட மனிதன் தன்னுடைய சிறிய நாவினால் சில நேரங்களில் மேன்மையடைகின்றான். ஆனால் பல நேரங்களில் சிறுமையடைந்து விடுகிறான்.

உலகில் நிகழும் பல பிரச்சனைகளுக்கு மூல காரணம் இந்த நாவு தான் என்றால் அது மிகையாகாது. இந்த நாவின் மூலம் பல சமூகங்களுக்கிடையே பெரும் போர்களும் அழிவுகளும் ஏற்பட்டிருக்கின்றன. அதே போல் மிகப் பெரும் சமுதாய எழுச்சிகளும், புரட்சிகளும் ஏற்பட்டிருக்கின்றன. எனவே நாம் இந்த நாவைப் பயன்படுத்துவதைப் பொறுத்து அதன் விளைவு ஆக்கப் பூர்வமானதாகவோ அல்லது அழிவைத் தரக்கூடியதாகவோ அது அமைகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
‘ஒரு அடியான் அல்லாஹ் திருப்தியுறும் வார்த்தையைக் கூறுகிறார். (ஆனால்) அதனுடைய சக்தியைப் பற்றி எண்ணிப் பார்ப்பதில்லை. இதன் காரணமாக அல்லாஹ் அவனுடைய அந்தஸ்த்தை உயர்த்துகிறான். இன்னொரு மனிதன் அல்லாஹ்வின் கோபத்திற்குரிய வார்த்தையை பேசுகிறான். (ஆனால்) அவன் அதனுடைய சக்தியை எண்ணிப் பார்ப்பதில்லை. இதன் காரணமாக அல்லாஹ் அவனை நரகத்தில் எறிகிறான்’
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
ஆதாரம் :புகாரி

நம் வாயிலிருந்து உச்சரிக்கும் அனைத்து வார்த்தைகளும் பதிவு செய்யப்படுகின்றது: -
முதலில் நாம் ஒன்றை கவனமாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். இறைவனால் நியமிக்கப்பட்டிருக்கும் வானவர்கள் கன நேரம் கூட தவறாமல் நம்மைக் கண்கானித்துக் கொண்டு நம்முடைய அனைத்துச் செயல்களையும் பதிவு செய்கின்றனர். மேலும் நம் வாயிலிருந்து உதிரும் அனைத்து வார்த்தைகளையும் ஒன்று கூட விடாமல் பதிவு செய்கின்றனர். அல்லாஹ் மறுமையில் இவை குறித்து நிச்சயமாக நம்மிடம் கேள்வி கேட்பான் என்பதை முஸ்லிமான ஒவ்வொருவரும் நன்கு நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.
 50:18
அல்லாஹ் கூறுகிறான்:
(மனிதன்) எதைக் கூறியபோதிலும் அதனை எழுதக் காத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமலில்லை. (அவன் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகின்றது.) 
ஸூரத்து ஃகாஃப் 50:18

சிந்திக்காமல் பேசுவதால் ஏற்படும் விபரீதம்: -
ஒரு அடியான் சில வார்த்தைகளை மொழிகிறான். ஆனால் அதைப்பற்றி (நல்லதா அல்லது கெட்டதா என்று) சிந்திப்பதில்லை. இதன் காரணமாக கிழக்கிற்கும், மேற்கிற்கும் இடைப்பட்ட தூரமளவிற்கு நரகத்தின் (அடிப்பாகத்திற்கு) வீழ்ந்து விடுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
ஆதாரம் : புகாரி

முஸலிம்களில் சிறந்தவர்: -
முஸ்லிம்களில் எவர் சிறந்தவர் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது ‘எவருடைய நாவினாலும், கரத்தினாலும் (ஏனைய) முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகிறார்களே அவரே!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி),
ஆதாரம் : புகாரி

நல்லதைப் பேசு! அல்லது வாய் மூடி இரு!
எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதைச் சொல்லட்டும்! அல்லது வாய் மூடி இருக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
ஆதாரம் : புகாரி

சுவர்க்கம் செல்ல எளிய வழி: -
எவர் தமது தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாகப் பயன்படுத்த பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு சொர்க்கத்திற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரலி),
ஆதாரம் : புகாரி

அதிகமாக சாபமிடும் பெண்கள்
“ஒரு நபி(ஸல்) அவர்கள் ஹஜ் அல்லது நோன்பு பெருநாளன்று தொழும் இடத்திற்கு வந்து பெண்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்கு சென்றார்கள். அப்போது தர்மம் செய்யுங்கள். பெண்கள் சமுதாயமே, உங்களை நரகவாதிகளில் மிக அதிகமானவர்களாக பார்க்கிறேன். என்று நபி(ஸல்) கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே அது எப்படி என்று கேட்டார்கள். நீங்கள் சாப வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்துகிறீர்கள். கணவனுக்கு மாறு செய்கிறீர்க்ள என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.”
அறிவிப்பவர்: அபூஸயீத்அல்குத்ரீ(ரழி)

நூல்கள்புகாரி, முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதரே, என் மீது தாங்கள் மிகவும் பயப்படுவது ஏன்? என்று நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். தன் நாவை பிடித்துக் கொண்டு இதுதான் (அதிகமாக அஞ்சுவது) என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” 
அறிவிப்பவர்: சுஃப்யான் பின் அப்துல்லாஹ் தகபிஃ(ரழி
நூல்: திர்மிதி

அதிகமாக அமல்கள் செய்தும் நாவால் துன்பம் தருபவர்
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே, இன்னவள் அதிகமாக நோன்பு பிடிக்கிறாள், அதிகமாக தான தர்மங்கள் செய்கிறான். ஆனால் அப்பெண் பக்கத்து வீட்டினருக்கு தன் நாவால் துன்பம் தருகிறாள். என கேட்டபோது அவள் நரகத்தில் இருப்பாள் என நபி(ஸல்) கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே இன்னவள் குறைவாக நோன்பு நோற்பாள் தர்மங்கள் செய்கிறாள் தொழுகிறாள். இக்த் என்ற இடத்தில் உள்ள காளை மாடுகளை தர்மம் செய்கிறால் - ஆனால் தன் நாவால் பக்கத்து வீட்டாருக்கு துன்பம் தருவதில்லையே என கேட்ட போது இந்த பெண் சுவனத்தில் இருப்பாள் என நபி(ஸல்) விளக்கம் அளித்தார்கள்.” 
அறிவிப்பவர்அபூஹுரைரா (ரலி), 
நூல்கள்: அஹ்மத், பைஹகீ


அவதூறு கூறுதல்!

சமூக சீர்கேட்டை விளைவிக்கும் வெள்ளித் திரை சினிமாக்களாலும் சின்னத்திரை சீரியல்களாலும் மக்களின் சிந்திக்கும் அறிவு மழுங்கிவிட்ட இக்காலக் கட்டத்தில் பிறர் மீது அவதூறு கூறுவது என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. இத்தகைய அவதூறுகளினால் பாதிக்கப்பட்டோர் எத்தகைய அவதிக்குள்ளாகிறார்கள் என்பதைப் பற்றி துளிகூட அக்கரையில்லாமல் தங்களின் வாய்க்கு வந்தபடியெல்லாம் தமக்கு வேண்டாதவர் மீது அவதூறு கூறி சேற்றை வாரியிறைக்கின்றனர்.

ஒரு பெண் விசயத்தில் கூறப்படும் அவதூறானது அவளின் வாழ்க்கையையே சின்னாபின்னமாக சிதைத்து ஒரு மீளமுடியாத நிரந்தர ஊனத்தை ஏற்படுத்தும். அதுவும் திருமணமாகாத பெண்கள் என்றால் அவளுக்கு மணவாழ்க்கை என்பதே கேள்விக்குறியாகிவிடும்.

இத்தகைய கொடுமையான செயலான அவதூறு கூறுவதை இஸ்லாம் தடை செய்திருப்பதோடல்லாமல் அவதூறு கூறுபவர்களுக்கு கடுமையான தண்டனை இருக்கின்றது என்றும் எச்சரிக்கின்றது.

அவதூறு கூறுபவர்களுக்கான எச்சரிக்கைகள்: -
அல்லாஹ் கூறுகிறான்: -
எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.
ஸூரத்துந் நூர் (பேரொளி) 24:4

எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு.
ஸூரத்துந் நூர் (பேரொளி) 24:23

‘அழிக்கக் கூடிய ஏழு விஷயங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது நாங்கள் அவை என்னென்ன? என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், சூனியம் செய்தல், நியாயமாகவேயன்றி அல்லாஹ் ஹராமாக்கிய உயிரை கொலை செய்தல், வட்டியின் மூலம் சாப்பிடுதல், அனாதைகளின் பொருளை சாப்பிடுதல், போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடுதல், கற்புள்ள பேதைப் பெண்களின் மீது அவதூறு கூறுதல்’ என்று பதிலளித்தார்கள்.

நன்றி:http://suvanathendral.blogspot.com/

No comments:

Post a Comment

நரகத்தில் நுழையும் முதல் 3 அணியினர்

(ஒருமுறை) அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் மக்கள் (கூடி, அவை) கலைந்தபோது, சிரியாவாசியான நாத்தில் பின் கைஸ் என்பவர், "பெரியவரே! அல்லாஹ்...