Tuesday, July 8, 2014

தும்மலின் ஒழுங்குகள்

தும்மல், கொட்டாவி, இருமல், விக்கல், ஏப்பம் இவை நாம் விரும்பிச் செய்வதில்லை. அவை, உடற்கூறுகளின் இயற்தன்மையால் ஏற்படும் அனிச்சை செயல்களாகும்.

தும்மல் வந்தால் தும்மிய பின்
الْحَمْدُ لِلَّهِ 
அல்ஹம்துலில்லாஹ்
எனக் கூற வேண்டும்.
இதன் பொருள் :
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

அல்ஹம்துல்லாஹ் என தும்மியவர் கூறுவதைக் கேட்டவர்
يَرْحَمُكَ اللَّهُ 
யர்ஹமு(க்)கல்லாஹ்
எனக் கூற வேண்டும்.
இதன் பொருள் :
அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக!

இதைக் கேட்டதும் தும்மியவர்
يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ 
யஹ்தீ(க்)குமுல்லாஹு வயுஸ்லிஹ் பா(B)(க்)கும்
எனக் கூற வேண்டும்.
இதன் பொருள் :
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! உங்கள் காரியத்தைச் சீராக்குவானாக!


நபி (ஸல்) அவர்களுக்கருகில் இரண்டு மனிதர்கள் தும்மினர். அப்போது அவர்களில் ஒருவருக்கு நபி (ஸல்) அவர்கள் ‘யர்ஹமுகல்லாஹ்’ (அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக) என்று மறுமொழி கூறினார்கள். மற்றொருவருக்கு மறுமொழி கூறவில்லை. அப்போது அவர்களிடம் (இது குறித்துக்) கேட்கப்பட்டது. அதற்கவர்கள், ‘இவர் (தும்மியவுடன்) ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று இறைவனைப் புகழ்ந்தார். அவர், ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று இறைவனைப் புகழவில்லை. (எனவே, இவருக்கு மறுமொழி பகர்ந்தேன். அவருக்கு மறுமொழி பகரவில்லை)” என்று பதிலளித்தார்கள்.
(அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) நூல்: புஹாரி : 6221)

நபி(ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஏழு செயல்களைச் செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடைவிதித்தார்கள்.
எங்களுக்குக் கட்டளையிட்ட ஏழு விஷயங்கள் இவைதாம்:
1. நோயாளிகளை நலம் விசாரிப்பது.
2. ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வது.
3. தும்மிய(வர் 'அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்' என்று கூறினால் அ)வருக்கு ('அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக' என்று) மறுமொழி கூறுவது.
4. விருந்து அழைப்பை ஏற்றுக் கொள்வது.
5. சலாமுக்கு (முகமனுக்கு) பதில் உரைப்பது
6. அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவுவது.
7. சத்தியம் செய்தவர் அதை நிறைவேற்ற உதவுவது.
(ஆண்களாகிய) எங்களுக்கு அவர்கள் தடை செய்த ஏழு விஷயங்கள் இவைதாம்:
1. 'தங்கமோதிரம் அணிவது' அல்லது 'தங்க வளையம் அணிவது'
2. சாதாரணப் பட்டு அணிவது.
3. அலங்காரப் பட்டு அணிவது.
4. மென்பட்டு அணிவது
5. மென்பட்டுத் திண்டு பயன்படுத்துவது.
(அறிவிப்பாளர்: பராஉ இப்னு ஆஸிப்(ரலி)  நூல்: புஹாரி : 2445,5175,5635,6222,6235 முஸ்லிம் 4194)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஆறாகும்" என்று கூறினார்கள். "அவை யாவை, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரைச் சந்திக்கும்போது முகமன் கூறுவாயாக. அவர் உன்னை விருந்துக்கு அழைத்தால் அவருக்குப் பதிலளிப்பாயாக. அவர் உன்னிடத்தில் அறிவுரை கூறச்சொன்னால் அவருக்கு அறிவுரை கூறுவாயாக. அவர் தும்மினால் "அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறினால் (யர்ஹமு கல்லாஹ் என்று) அவருக்கு மறுமொழி கூறுவாயாக. அவர் நோய்வாய்ப்பட்டால் அவரை உடல்நலம் விசாரிப்பாயாக. அவர் இறந்துவிட்டால் அவரது ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வாயாக" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
(அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 4368)

உங்களில் எவரேனும் தும்மினால் 'அல்ஹம்து லில்லாஹி அலா குல்லி ஹால்' (எல்லா நிலைகளிலும் இறைவனுக்கே புகழனைத்தும்) என்று கூறட்டும். இவ்வாறு கூறியதை செவியேற்கக்கூடியவர்கள் 'யர்ஹமகல்லாஹ்' (இறைவன் உனக்கு அருள் புரியட்டும்) என்று பதில் கூறட்டும். பிறகு தும்மியவர் 'யஃபிருல்லாஹு லீ வலகும'; (இறைவன் உங்களையும் என்னையும் மன்னிப்பானாக!) என பதில் அறிவிக்கட்டும் என நபி (ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பாளர்: ஹிலால் பின் யஸார் (ரலி)  நூல்: திர்மிதி)
'யஃபிருல்லாஹு லீ வலகும'; என்பதற்கு பதிலாக 'யஹ்தீகுமல்லாஹ் வயுஸ்லிஹ் பாலகும்' (இறைவன் எங்களுக்கு நேர்வழி காட்டி உங்கள் நிலைமையை சீர்செய்வானாக) என்று கூறட்டும் என்று நபிமொழி அலி (ரலி), அபூஅய்யூப் (ரலி) வாயிலாக அபூதாவூத், நஸயி ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் ஒரு மனிதர் தும்மி ("அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறி)னார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் "யர்ஹமுகல்லாஹ்" (அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக) என்று மறுமொழி கூறினார்கள். அவரே மற்றொரு முறை தும்மினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இந்த மனிதருக்கு ஜலதோஷம் ஏற்பட்டுள்ளது" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
(அறிவிப்பாளர்: சலமா பின் அல்அக்வஉ (ரலி) நூல்: முஸ்லிம் 5717, திர்மிதி, அபூதாவூத், நஸயீ)

 அல்லாஹ்விடமிருந்து ஏராளமான நன்மைகளை தமது உம்மத்தினர் பரிசாக பெற வேண்டும் என்பதிலும், முஸ்லிம் சமுதாயத்தில் உறவுகளை பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளவு கடந்த அக்கறை காட்டினார்கள்.

ஒரு முஸ்லிமுக்கு அல்லாஹ்வின் நாட்டப்படி எது நடந்தாலும் அத்தனையும் நன்மைகளாக பதிவு செய்யப்படுகின்றது, அவனுக்கு நல்லது நடந்தால் அதை பொருந்திக் கொண்டு அதற்காக அவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறான், ஒரு தீயது நடந்தால் அதையும் பொறுந்திக் கொண்டு பொறுமையோடு இருக்கின்றான், இந்த இரண்டு விஷயங்களும் முஃமினுக்கு நன்மைகளாகவே அமைகின்றன.

 சர்வசாதாரண நிகழ்வுகளான, தும்மும் போதும், கொட்டாவி விடும் போதும் கூட எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்கள் நம்மிடம் உள்ளன. இவையும் அல்லாஹ்விடம் நன்மைகளை பெற்றுத் தருவதோடு மற்றவர்களோடு உறவுகளை பலப்படுத்துவதற்கும் உதவியாக இருக்கின்றன.

நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள், (இதைக் கேட்கும்) உங்கள் சகோதரர் அல்லது நண்பர், ‘யர்ஹமுக்கல்லாஹ்’ (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்று சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையை சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)  நூல்: புஹாரி : 6224)

இந்த ஹதீஸில் ஒருவர் தும்மும் போது நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்கிற நாகரீகத்தை நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தருகின்றார்கள்.

நட்பையும் பிறர் நலம் நாடும் குணத்தையும் எடுத்துக்காட்டும் ஒரு நல்வாழ்த்து தான் இது. இது இவ்வுலகுக்கும் மறுமைக்கும் உரிய சிறந்ததைத் தருகின்றது, அல்லாஹவின் அருளை இது ஊர்ஜிதம் செய்கிறது. அதற்கு பதிலாக நாம் அதையே திருப்பிச் சொல்ல வேண்டும்.

இவ்வுலகத்தில் ஒருவர் இறைவனின் வழிகாட்டுதலைப் பெற்றால் அவர் தவறுகளிலிருந்து விலகி இருப்பார். மனம் திருப்திப்படுவதையும் ஆறுதல் அடைவதையும் அவர் உணருவார்.

இப்படிப்பட்ட பரிமாற்றம் நிகழும் போது அதாவது இயல்பாகவே மனதோடு தொடர்புள்ள தும்மல் போன்ற நிகழ்வுகள் நிகழும் போது சமூகத்திற்குள் நல்லுறவுகள் ஏற்பட வழி பிறக்கும்.

இங்கே ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்வது முக்கியமாகும். அதாவது இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் சொல்வதற்கான வாசகங்களை நபி (ஸல்) அவர்கள் ஒருமையில் கற்றுத் தந்துள்ளார்கள், இந்த முறை தான் அம்மக்களிடையே மிகவும் பிரபல்யமான நடைமுறையாகும். மற்றொரு ஹதீஸில் அவ்வாசகங்கள் பன்மையில் இடம் பெற்றுள்ளன, இது மொழி அடிப்படையில் மிகப் பொருத்தமானதாகும்.

பன்மையில் வாசகங்களை உபயோகிக்கும் போது நம்மைக் கண்காணிக்கும் வானவர்களையும் உள்ளடக்கிக் கொள்வதாக இதைச் சொல்ல இயலும்.

 இவ்வாறு தும்மும் ஒருவரிடம் 'அல்லாஹ் உங்களுக்கு அருள்புரியட்டும்' என்று சொல்லும் போது, அது அவரையும் அவரோடு இருக்கும் வானவர்களையும் சேர்த்தே சொல்கிறார் என்பது பொருள். அதோடு அதற்கான பதிலும் வானவர்களையும் அதோடு தொடர்புள்ளவர்களையும் உள்ளடக்கிய வகையில் பன்மையில் இருக்கும்.

நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வேறொரு அறிவிப்பில், 'உங்களில் ஒருவர் தும்மும் போது, ‘அல்ஹம்துலில்லாஹ்’ (அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று சொன்னால் மலக்குகள், ‘ரப்பில் ஆலமீன்’ ((அவன்) அகில உலகத்தின் இரட்சகன்) என்று கூறுவார்கள். ரப்புல் ஆலமீன் என்பதை தனது முந்தைய வாசகத்தோடு இணைத்துக் கூறினால் மலக்குகள், 'அல்லாஹ் உமக்கு அருள் புரிவானாக!' என்று கூறுவார்கள்'.
(ஆதாரம் புஹாரியின் அதபுல் முஃப்ரத், தப்ரானி)

இதில் மலக்குகள் முதன் முதலில் சொல்லும் வாசகம் தும்மலுக்குப் பிறகு ஒருவர் சொல்ல வேண்டிய வார்த்தையை முழுமைப்படுத்துவதற்காக ஆகும்.

இந்த ஹதீஸ் அல்லாஹ்வை புகழும் போது முழுமையாக புகழ வேண்டியதன் அவசியத்தை சொல்கிறது. அகில உலகத்திற்கும் அல்லாஹ்வே இறைவன் என்பதை ஒத்துக் கொண்டு அவ்வாறே புகழ வேண்டும் என்பதைச் சொல்கிறது. அவ்வாறு புகழ்ந்தால் தான் மலக்குகள் அவருக்கு அருள் புரியுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்திப்பார்கள்.

இது கேட்கக் கூடியவர்களின் கவனத்தைக் கவருவதோடு தொடர்பு கொண்டது என்று நபி (ஸல்) அவர்கள் பல சமயங்களில் விளக்கம் தந்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையிலிருந்து இன்னொரு தும்மல் ஒழுங்கையும் நாம் கற்றுக் கொள்கிறோம். அதாவது தும்மலுக்குப் பிறகு அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்லாதவருக்கு அல்லாஹ்வின் அருளை பிரார்த்திக்க வேண்டியதில்லை. இதை கீழ் வரும் ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

நபி(ஸல்) அவர்களுக்கருகில் இருவர் தும்மினர். அப்போது அவர்களில் ஒருவருக்கு நபி(ஸல்) அவர்கள் ('அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக' என) மறுமொழி கூறினார்கள். இன்னொருவருக்கு மறுமொழி கூறவில்லை. அப்போது அந்த மனிதர், 'இறைத்தூதர் அவர்களே! இவருக்கு மறு மொழி கூறினீர்கள். எனக்கு மறுமொழி கூறவில்லையே!' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இவர் (தும்மியவுடன்) ('அல்ஹம்துலில்லாஹ்' என்று) இறைவனைப் புகழ்ந்தார். நீர் ('அல்ஹம்துலில்லாஹ்' என்று கூறி) இறைவனைப் புகழவில்லை. (எனவே, இவருக்கு மறுமொழி பகர்ந்தேன். உமக்கு மறுமொழி பகரவில்லை)' என்று பதிலளித்தார்கள்.
(அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புஹாரி : 6225, முஸ்லிம் 5715)

மற்றொரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: தும்மலை அல்லாஹ் விரும்புகிறான். கொட்டாவியை வெறுக்கிறான்.

ஒருவர் தும்மியதும் இறைவனைப் புகழ்ந்தால் அதைக் கேட்கும் ஒவ்வொரு முஸ்லிமும் இறைவனின் அருளை வழங்குமாறு அவனை பிரார்த்திக்க கடமைப்பட்டுள்ளார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், அல்லாஹ் தும்மலை விரும்புகிறான்; கொட்டாவியை வெறுக்கிறான். எனவே, ஒருவர் தும்மியவுடன் 'அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால், அதைக் கேட்கும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அவருக்கு 'யர்ஹமுக்கல்லாஹ்’  (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று மறுமொழி கூறுவது அவசியமாகும். ஆனால், கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் கொட்டாவிவிட்டால் முடிந்தவரை அதைக் கட்டுப்படுத்தட்டும். ஏனெனில், யாரேனும் (கட்டுப்படுத்தாமல்) 'ஹா' என்று (கொட்டாவியால்) சப்தமிட்டால் ஷைத்தான் சிரிக்கிறான்.
(அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)  நூல்: புஹாரி : 6223, 6226)

 அல்லாஹ் எதை விரும்புகிறான் எதை வெறுக்கிறான் என்பது செயல்களை வைத்து அல்ல, அது ஏற்படுத்தும் விளைவுகளை பொருத்தது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.

 தும்மல் என்பது ஒருவரை எந்நேரமும் தயாராக இருக்கச் செய்கிறது. தும்மியவுடன் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரையான அல்லாஹ்வைப் புகழச் செய்கிறது, அதோடு மற்றவர்களின் துஆவையும் பெற்றுக் கொள்ளச் செய்கிறது. இவை அனைத்தும் நல்லதும் நன்மையை அடைந்து கொள்வதுமாகும்.

அதனால் அதை அல்லாஹ் விரும்புகிறான். அதோடு கொட்டாவி சோம்பலையும் சோர்வையும் ஏற்படுத்துகிறது. கொட்டாவி விடும் போது அம்மனிதனின் மானம் கப்பலேற்றப்படுவதோடு, இது அவரைப் பார்த்து ஷைத்தானை சிரிக்க வைக்கிறது.

அதனால் நபி (ஸல்) கொட்டாவியை முடிந்த வரை தடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கிறார்கள். நம்மால் தடுக்க முடியாத போது வாயை கைகளால் மூடிக்கொள்ள வேண்டும்.

இங்கே ஒரு கேள்வி எழுகிறது, நபி (ஸல்) அவர்களின் இந்த ஹதீஸை நடைமுறைப்படுத்துவது நம் மீது கடமையா? அல்லது பரிந்துரையா?

பல மார்க்க அறிஞர்கள் இதை கடமையாகவே கருதுகிறார்கள், ஏனென்றால் அந்த ஹதீஸ், அதை வலியுறுத்தக்கூடிய விதத்தில் சொல்கிறது. மற்ற அறிஞர்கள் கூறும் போது, நம்மைச் சுற்றி இருப்பவர்களோ அல்லது ஒருவரோ இதை நிறைவேற்றினால் போதுமானது, இந்த கடமையை நிறைவேற்றியதாக கருதப்படும்;, யாருமே இதை செய்யாது விட்டால் நாம் அனைவரும் அந்த குற்றத்திற்காக அல்லாஹ்வால் தண்டிக்கப்படுவோம் என்று கூறுகிறார்கள்.

 நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தவைகள், பொதுவாக அன்றாடம் நிகழக்கூடியவைகளாகும், அவை ஒவ்வொரு முந்தைய முஸ்லிமாலும் கடைப்பிடிக்கப்பட்டது, அதோடு அவர்களின் நடைமுறை பழக்கவழக்கமாகவும் மாறியது.

எவர்கள் மார்க்க கல்வியைப் பெற்றார்களோ அல்லது தும்மிய பிறகு அல்லாஹ்வை புகழ கற்றுக் கொண்டார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப் பெறுவதற்காக அவனைப் புகழ்கிறார்கள், மற்றவர்கள் அல்லாஹ்வின் அருளை அவருக்காக பெற்றுத்தருகிறார்கள்.

முந்தைய முஸ்லிம் சமுதாயத்திலிருந்து சில உதாரணங்களை சொல்வதானால், முஆவியா (ரலி) யின் ஆட்சியின் போது கடல் பயணம் மேற்கொண்ட சில முஸ்லிம்களின் சம்பவத்தைச் சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

படகுகள் கடல் கரையை வந்தடைந்தன. ஒரு படகில் இருந்தோர் நபி (ஸல்) அவர்களின் தோழரான அபூ அய்யூப் அல்அன்சாரி அவர்களை விருந்துக்கு அழைத்தார்கள். அவர் அழைப்பை ஏற்று வருகையும் தந்தார், அவர் மேலும் சொன்னார், 'விருந்துக்கு என்னை அழைத்தீர்கள், ஆனால் நான் நோன்பு வைத்திருக்கிறேன். இருந்தாலும் நான் இங்கே வந்திருக்கிறேன் ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன், 'ஆறு விஷயங்களில் ஒரு முஸ்லிம் தனது சகோதரனுக்கு பதிலளிக்க வேண்டும். அதில் எதையேனும் விட்டுவிட்டால் அவர் தனது சகோதரனுக்கு செய்யும் கடமையை விட்டுவிட்டார். அவைகளாவன, அவரை சந்திக்கும் போது அவருக்கு ஸலாம் சொல்வது, விருந்துக்கு அழைக்கும் போது பதிலளிப்பது, தும்மும் போது அவருக்கு அருள் புரியுமாறு அல்லாஹ்வை பிரார்த்திப்பது, நோய்வாய்ப்பட்டிருப்பின் சென்று அவரை சந்திப்பது, அவர் இறக்கும் போது அவரது ஜனாஸாவின் அடக்கத்தில் கலந்து கொள்வது, ஆலோசனைகள் தேவைப்படும் போது தனது சரியான ஆலோசனையை வழங்குவது'.

மற்றுமொரு அறிவிப்பில், 'எங்களிடம் நல்ல நகைச்சுவையாக பேசும் ஒருவர் இருந்தார், அவர் எம்மோடு சேர்ந்து உணவருந்தும் ஒருவரை நோக்கி, 'அல்லாஹ் உமக்கு நன்மையை தருவானாக!' என்று பலதடவை கூறியதும் அவர் கோபமடைந்தார். நகைச்சுவை மன்னன், அபூ அய்யூப் அவர்களை சந்தித்து, நன்மைகளை அதிகம் அவர் அடைய வேண்டும் என்பதற்காக பிரார்த்தித்ததால் கோபமடையும் ஒருவரிடம் நான் எவ்வாறு நடந்து கொள்வது? என்று கேட்டார். அதற்கு அபூ அய்யூப் அவர்கள் கூறினார்கள், நல்ல விஷயத்தை ஏற்றுக் கொள்ளாதவரிடம் அதற்கு எதிர்மறையாக நடந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் சொல்வதுண்டு, அதனால் நீங்கள் எதிர்மறையாக நடந்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள். வெளியூர் சென்று விட்டு திரும்பிய அம்மனிதரிடம் நகைச்சுவையாக பேசக்கூடியவர் சென்று, 'அல்லாஹ் உமக்கு கெட்டதை பரிசாக தருவானாக!' என்றார். அதற்கு அவர் சிரித்துக் கொண்டு, 'உம்முடைய தந்திரங்களை விட்டுவிட மாட்டீரா?' என்று கூறினார். (அல்புஹாரியின் அதபுல் முஃப்ரத்)

நபி (ஸல்) அவர்களுக்கு தும்மல் வந்தால் தமது கைகளாலோ அல்லது ஆடையாலோ தம் முகத்தை மூடி சப்தத்தைக் குறைப்பார்கள் என்று அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்: அபூதாவூத் , திர்மிதி, ஹாக்கிம்

நாம் தும்மும் போது அருகில் உள்ளவர்கள் மீது எச்சில்கள் பட வாய்ப்புள்ளது. இது அருவறுப்பையும், பிரச்சனையையும் ஏற்படுத்தலாம். அதே போன்று தும்மலால் ஏற்படும் சப்தம் அருகில் உள்ளவர்களுக்கு இடையூறை ஏற்படுத்தலாம். இவைகளைத் தவிர்க்கவே நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட முறையை கடைபிடித்துள்ளார்கள்.

முஸ்லீம் அல்லாதவர்களுக்கு பதில் கூறலாமா?

நபி (ஸல்) அவர்கள் 'யர்ஹமகல்லாஹ்' (அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக) என்று கூற வேண்டும் என்பதை எதிர்பார்த்து யூதர்கள் வேண்டுமென்றே நபி (ஸல்) முன்னிலையில் தும்முவார்கள். யூதர்கள் எதிர்பார்ப்பது போன்று நபி (ஸல்) கூறாமல் 'யஹ்தீகுமுல்லாஹ் வயுஸ்லிஹ் பாலகும்' (அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டி உங்களை சீர்படுத்துவானாக) என்று கூறி விடுவார்கள்.
(அறிவிப்பாளர்: அபூமூஸா (ரலி)  நூல்: அபூதாவூத், திர்மிதி, நஸயீ)


No comments:

Post a Comment

நரகத்தில் நுழையும் முதல் 3 அணியினர்

(ஒருமுறை) அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் மக்கள் (கூடி, அவை) கலைந்தபோது, சிரியாவாசியான நாத்தில் பின் கைஸ் என்பவர், "பெரியவரே! அல்லாஹ்...