"விருந்துக்கு அழைக்கப்பட்டால் அதை ஏற்றுச்
செல்லுங்கள்!" என அனேக நபிமொழிகள் வலியுறுத்திக் கூறுகின்றன. விருந்தானது,
திருமணத்திற்குரியது என்றிருந்தாலும், அழைக்கப்பட்டு விட்டால் அதையேற்று இயன்றவரை
விருந்தில் கலந்து கொள்வது நபிவழியாகும்.
மணவிருந்துக்கோ, மற்ற விருந்துக்கோ அழைக்கப்பட்டவர் அதை ஏற்றுச்
செல்லட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:
இப்னு உமர் (ரலி) நூல்: முஸ்லிம் 2810)
ஏழைகளை விட்டுவிட்டு, செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும்
மணவிருந்து (வலீமா) உணவே, கெட்ட உணவாகும். (அழைப்பை ஏற்று) விருந்துக்குச்
செல்லாதவர் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டார்.(அறிவிப்பவர்:
அபூ ஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி 5177, முஸ்லிம் 2816)
திருமண விருந்து, மணமுடித்தபின் மக்களை அழைத்து அவர்களுக்கு
உணவளித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதாகும். இதன் மூலம் மணமகன், மணமகள்
இருவரின் திருமணத்தை அறிவித்ததாகிவிடும். மணவிருந்தை சக்திக்கேற்ப மணமகன் வழங்க
வேண்டும். இதற்கென கூடுதல் செலவு செய்து கடன் சுமையில் அழுந்தக் கூடாது.
நபி (ஸல்) அவர்களின் காலத்துத் திருமண விருந்து மணமகன்
வழங்கியதாகவே நடைமுறையில் இருந்துள்ளது. அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள்
திருமணம் முடித்தபோது ''ஓர் ஆட்டையாவது (அறுத்து) மணவிருந்து
அளியுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக (புகாரி 5029, முஸ்லிம்
2790) ஆதாரப்பூர்வ அறிவிப்புகளில் காண்கிறோம்.
ஆனால் இஸ்லாம் மார்க்கத்தை முறையாக விளங்காததால் திருமணத்திற்கு
முன்னரே ''மாப்பிள்ளை வீட்டார், நாங்கள் இத்தனை பேர்கள் வருவோம். அத்தனை
பேருக்கும் நீங்கள் உணவு சமைத்து விருந்து அளிக்க வேண்டும்'' என பெண் வீட்டாரிடம்
நிபந்தனையிட்டுக் கேட்டுப் பெறுகின்றனர். மற்ற வரதட்சணைப் பேச்சு
வார்த்தைகளோடு விருந்து கணக்கையும் பெண் வீட்டார் மீது சுமத்துவதால் இதுவும்
வரதட்சணையில் அடங்கும். மணப் பெண்ணிடம் வரதட்சணைக் கேட்பது மார்க்கத்திற்கு முரணான செயல், பெண்
வீட்டார் அளிக்கப்படும் மணமகள் விருந்து இஸ்லாத்தில் இல்லாதது. அந்த விருந்தில்
கலந்து கொள்வதைத் தவிர்க்கவேண்டும்.
சாதாரண நேரத்தில் அளிக்கப்படும் விருந்தை, ஆண் - பெண் என்ற
வித்தியாசமில்லாமல் எப்போது வேண்டுமானாலும் கொடுக்கலாம். விருந்துக்கு
அழைக்கலாம். "குடும்பத்தாருடன் வாருங்கள்!" என்ற அழைப்பு,
அக்குடும்பத்திலுள்ள பெண்களையும் விருந்துக்கு அழைத்ததாகும்.
பள்ளிவாசலில் சில மக்களுடன் நபி(ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தனர். நான்
(அவர்களை நோக்கி) எழுந்து சென்றேன். 'உம்மை அபூ தல்ஹா அனுப்பினாரா?' என்று
நபி(ஸல்) கேட்க நான் 'ஆம்' என்றேன். 'விருந்துக்கா?' என்று அவர்கள் கேட்க நான்
'ஆம்' என்றேன். தம்முடன் இருந்தவர்களை நோக்கி 'எழுந்திருங்கள்!" என்று
கூறிவிட்டு நபி(ஸல்) அவர்கள் நடந்தார்கள். நானும் அவர்களுடன் நடந்தேன். (அறிவிப்பவர்:
அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி 422, முஸ்லிம் 4145, திர்மிதீ,)
என்னுடைய பாட்டி முலைக்கா(ரலி) விருந்து தயாரித்து நபி(ஸல்) அவர்களை
(விருந்துண்ண) அழைத்தார். நபி(ஸல்) அவர்கள் விருந்துண்டார்கள். பின்னர்,
'எழுந்திருங்கள்; உங்களுக்கு நான் தொழுகை நடத்துகிறேன்" என்றார்கள். நான்
அதிகப் பயன்பாட்டினால் கறுத்துப் போய்விட்ட ஒரு பாயருகே சென்று தண்ணீரால் அதைப்
பதப்படுத்தினேன். நபி(ஸல்) அவர்கள் (இமாமாக) நின்றார்கள். என்னுடன் (எங்கள்
வீட்டில் வளரும்) அனாதைச் சிறுவரும் நின்றார். பாட்டி எங்களுக்குப் பின்னால்
நின்றார். நபி(ஸல்) எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். (அறிவிப்பவர்:
அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்கள்: புகாரி 860, முஸ்லிம் 1168)
"ஒரு தையல்காரர் தாம் தயாரித்த விருந்துக்காக நபி(ஸல்) அவர்களை
அழைத்தார். நானும் நபி(ஸல்) அவர்களுடன் அந்த விருந்துக்குச் சென்றேன். அவர்
ரொட்டியையும் உலர்ந்த இறைச்சித் துண்டுகளும் சுரைக்காயும் போடப்பட்ட குழம்பையும்
நபி(ஸல்) அவர்களின் முன்னே வைத்தார்; நபி(ஸல்) அவர்கள் தட்டின் ஓரங்களில்
சுரைக்காயைத் தேடுவதை பார்த்தேன். அன்றிலிருந்து நான் சுரைக்காயை விரும்பக்
கூடியவனாகி விட்டேன்!" (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்கள்: புகாரி 2092, முஸ்லிம் 4147)
விருந்து இஸ்லாத்தில் ஆர்வமூட்டப்பட்ட செயலாகும். விருந்து என்றால்
ஆடம்பரமாக இருக்க வேண்டும்; தட்டில் தேவைக்கு அதிகமாக மிகைத்து காணப்பட வேண்டும்
என ஏகப்பட்ட உணவுப் பதார்த்தங்களைச் சமைத்து, விருந்துக்கு வந்தவரெல்லாம்
உண்டு முடித்தாலும் தீராத அதிகப்படியான உணவை வீணாக்கி குப்பைத் தொட்டியில்
எறியும் அளவுக்கு இன்றைய விருந்தோம்பல் நிகழ்கின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment