இறந்தவர் ஆணாக இருந்தால் அவரது மனைவி கடைப் பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் சில உள்ளன. இந்த ஒழுங்குகளைச் சரியாக அறியாத காரணத்தால் பெண்களுக்குப் பல்வேறு அநீதிகள் இழைக்கப்படுவதை நாம் காண்கிறோம்.
கணவனை இழந்த பெண்கள் கணவன் இறந்த உடனேயே மறுமணம் செய்து விடாமல் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக் கெடு முடிந்த பின்னர் தான் மறுமணம் செய்து கொள்ள வேண்டும். மறுமணம் செய்வதைத் தள்ளிப் போடும் இந்தக் கால கட்டம் இத்தா எனப்படுகிறது.
மறுமணத்தைத் தள்ளிப் போடும் இந்தக் காலகட்டம் அனைவருக்கும் ஒரே மாதிரியான அளவுடையதல்ல.
கணவன் இறக்கும் போது மனைவி கர்ப்பிணியாக இருந்தால் கருவில் வளரும் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை மறுமணம் செய்யலாகாது.
கணவன் இறந்த மறு நாளே மனைவி குழந்தையைப் பெற்று விட்டால் அந்த ஒரு நாள் தான் இவளுக்குரிய இத்தா – திருமணத்தைத் தள்ளிப் போடும் – காலமாகும்.
கணவன் மரணிக்கும் போது எட்டு மாத கர்ப்பிணியாக மனைவி இருந்தால் அவள் குழந்தையைப் பெற்றெடுக்க ஏறத்தாழ இரண்டு மாதங்கள் ஆகலாம். இந்தக் காலமே இவளுக்குரிய இத்தாவாகும்.
கணவன் மரணிக்கும் போது மனைவி கருவுற்றிருக்கிறாளா? இல்லையா என்பது தெரியாவிட்டால் நான்கு மாதமும் பத்து நாட்களும் திருமணத்தைத் தள்ளிப் போட வேண்டும். நான்கு மாதம் பத்து நாட்களுக்குள் வயிற்றில் கரு வளர்வது தெரிய வந்தால் அவள் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை இத்தா மேலும் நீடிக்கும்.
நான்கு மாதம் பத்து நாட்களில் குழந்தை இல்லை என்பது உறுதியானால் மறு நாளே அவள் மறுமணம் செய்து கொள்ளலாம்.
முதல் கணவனின் குழந்தையைச் சுமந்து கொண்டு இன்னொருவனுடன் வாழ்க்கை நடத்தினால் ஒருவனின் குழந்தைக்கு வேறொருவனைத் தந்தையாக்கும் மோசடியில் அது சேர்ந்து விடும்.
கணவன் இறந்த பின் மனைவி கருவுற்றிருந்தால் அவள் பிரசவிக்கும் வரை கணவனின் சொத்துக்கள் பங்கு வைக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படும். ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்பதைக் கருத்தில் கொண்டும், கருவறையில் வளரும் குழந்தையின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டும் கணக்கிட்டு முதல் கணவனின் சொத்திலிருந்து பங்கு பெற்றுத் தரும் பொறுப்பு இவளுக்கு உள்ளது. எனவே தான் இஸ்லாம் இந்தச் சட்டத்தை வழங்கியுள்ளது.
இதற்கான ஆதாரங்கள் வருமாறு:
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
திருக்குர்ஆன் 2:234
உங்கள் பெண்களில் மாதவிடாய் அற்றுப் போனவர்கள் விஷயத்தில் நீங்கள் சந்தேகப்பட்டால் அவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாதோருக்கும் உரிய காலக் கெடு மூன்று மாதங்கள். கர்ப்பிணிகளின் காலக் கெடு அவர்கள் பிரசவிப்பதாகும். அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவரது காரியத்தை அவன் எளிதாக்குவான்.
திருக்குர்ஆன் 65:4 ஒரு பெண்ணிண் வயிற்றில் கரு வளர்கிறதா என்பதை அறிந்து கொள்ள ஒரு மாதமே போதுமானது என்ற நிலையில் நான்கு மாதம் பத்து நாட்கள் என்று அதிக காலம் திருமணத்தைத் தள்ளிப் போடச் சொல்வது ஏன்? என்று சிலருக்குத் தோன்றலாம்.
மாதவிடாய் நின்றவுடன் ஒருத்தி கருவுற்றிருக்கிறாளா? இல்லையா என்பதை அறிந்து கொள்ள முடியும் என்றாலும் ஒரு பெண் சீக்கிரம் திருமணம் செய்ய ஆசைப்பட்டு தனது வயிற்றில் கரு வளரவில்லை என்று சொல்லி விடலாம்.
அல்லது அவள் கருவுற்றிருப்பது வெளிப்படையாகத் தெரியாத நிலையில் முதல் கணவன் இறந்து ஒரு மாதத்தில் மற்றொருவனை அவள் திருமணம் செய்தால் தனக்குப் பிறந்த குழந்தை தன்னுடையதாக இருக்காதோ என்று இரண்டாவது கணவன் சந்தேகப்படலாம்.
நான்கு மாதம் பத்து நாட்களில் ஒரு பெண் கருவுற்றிருப்பது அவளுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் தெரியும் அளவுக்கு வளர்ந்து விடும். நான்கு மாதம் பத்து நாட்களில் எந்த அறிகுறியும் தெரியாத நிலையில் இரண்டாவது கணவனுக்கு எந்தச் சந்தேகமும் வர முடியாது.
இப்படி திருமணம் செய்யாமல் தள்ளிப் போடுவதற்குப் பெயர் தான் இத்தா. ஆனால் தமிழக முஸ்லிம்கள் இதைப் புரிந்து கொள்ளாத காரணத்தால் இத்தா என்ற பெயரில் இருட்டறையில் பெண்களை அடைத்து வைக்கின்றனர். எந்தத் தேவைக்காகவும் வெளியே செல்லத் தடை விதிக்கின்றனர்.
மார்க்கம் கட்டளையிட்டவாறு ஹிஜாப் அணிந்திருந்த போதும் எந்த ஆணும் அவளைப் பார்க்கக் கூடாது என்கின்றனர்.
ஆண் குழந்தைகளைக் கூட பார்க்கக் கூடாது என்று தடை விதிக்கின்றனர்.
இவை அனைத்தும் மூடநம்பிக்கை ஆகும்.
கணவன் இறந்த பின் இஸ்லாம் அவளுக்கு வரையறுத்துள்ள காலத்துக்கு மறுமணத்தை அவள் தள்ளிப் போட்டால் அவள் இத்தாவைக் கடைப்பிடித்தவளாக ஆகி விடுவாள்.
இத்துடன் இன்னும் சில விதிகளும் உள்ளன. அவற்றை மட்டும் கடைப்பிடித்தால் போதுமானது.
மறுமணத்தைத் தள்ளிப் போட்டுள்ள இந்தக் காலகட்டத்தில் நறுமணம் பூசக்கூடாது. கண்மை இடக்கூடாது. அஸப் எனப்படும் வண்ண உடை தவிர வேறு வண்ண உடைகளை அணியக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)
நூல்: புகாரி 313, 5341, 5343
துணிகளை நெய்வதற்கான நூல்களை முறுக்கிய நிலையில் சாயத்தில் முக்கி எடுத்துப் பின்னர் பிரித்து நெய்யப்படுவதே அஸப் எனப்படும். இவ்வாறு செய்வதால் முறுக்கப்பட்ட நூல் தொகுப்பின் உட்பகுதி சாயமில்லாமலும், வெளிப்பகுதி சாயமாகவும் இருக்கும். அதாவது வெள்ளையும், நிறமும் கலந்ததாக அது இருக்கும்.
முற்றிலும் வண்ணமாக உள்ள ஆடைகளைத் தவிர்த்து வெள்ளையும், வண்ணமும் கலந்த நிலையில் உள்ள ஆடைகளையோ, முற்றிலும் வெண்மையான ஆடைகளையோ அணியலாம்.
மறுமணத்தைத் தள்ளிப் போடும் இந்தக் காலகட்டத்தில் நகை அணியலாகாது. மருதானி போன்ற சாயங்கள் பூசக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
நூல்கள்: அபூ தாவூத் 1960, அஹ்மத் 25369
இவற்றைக் கடைப்பிடித்தால் ஒருத்தி இத்தாவைக் கடைப் பிடித்து விட்டாள் என்பது பொருள்.
இந்தக் காலகட்டத்தில் திருமணத்தை நிச்சயம் செய்யவும் கூடாது. (காத்திருக்கும் கால கட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!
திருக்குர்ஆன் 2:235
மறுமணத்தைத் தள்ளிப் போட்டுள்ள காலகட்டத்தில் அந்தப் பெண்ணிடம் ஆண்கள் பேசலாம் என்பதையும், அவ்வாறு பேசும் போது உண்னை நான் மணந்து கொள்கிறேன் என்று நேரடியாகப் பேசக் கூடாது என்பதையும், சாடைமாடையாக இவ்வாறு பேசிக் கொள்ளலாம் என்பதையும் இவ்வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இத்தா காலத்தில் ஆண்களைப் பார்க்கவோ, பேசவோ கூடாது என்ற கருத்து முற்றிலும் தவறானது என்பதற்கும் இவ்வசனம் போதிய சான்றாக உள்ளது.
இது பற்றி மக்களிடம் அதிகமான அறியாமை நிலவுவதால் மேலும் சில சான்றுகளை முன் வைக்கிறோம்.
(என் கணவர்) அபூ ஸலமா மரணித்த போது நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அல்லாஹ்வின் தூதரே! அபூ ஸலமா மரணித்து விட்டார் என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹும்மக்ஃபிர்லீ வலஹு வ அஃகிப்னீ மின்ஹு உக்பா ஹஸனதன் (இறைவா! என்னையும், அவரையும் மன்னிப்பாயாக! அவருக்குப் பகரமாக அவரை விடச் சிறந்ததைத் தருவாயாக!) எனக் கூறு என்றார்கள். நான் அவ்வாறு கூறினேன். அவரை விடச் சிறந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் எனக்குப் பகரமாகத் தந்தான் என்று உம்மு ஸலமா (ரலி) கூறுகிறார்கள்.
நூல்: முஸ்லிம் 1527
கணவரை இழந்த உம்மு ஸலமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தேடிச் சென்றுள்ளனர். இது தவறு என்றால் கணவனை இழந்த நீ எப்படி வெளியே வரலாம்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டிருப்பார்கள். வெளியே வந்த உம்மு ஸலமா (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்துள்ளார்கள். இத்தா காலகட்டத்தில் எப்படி ஒரு ஆணிடம் பேசலாம்? என்று அவர்கள் கேட்கவில்லை.
இத்தா இல்லாத காலங்களில் அன்னிய ஆடவனுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அதைத் தான் இத்தாவின் போதும் கடைப்பிடிக்க வேண்டும்.
தேவைப்பட்டால் மற்ற நேரங்களில் வெளியே செல்வது போல் சென்று வருவது தவறல்ல என்பதற்கும் மேற்கண்ட ஹதீஸ் சான்றாக அமைந்துள்ளது.
காலமெல்லாம் வெள்ளை ஆடை தேவையில்லை
அவரவருக்கு உரிய இத்தா காலம் முடிந்த பின் அவர்கள் மறுமணம் செய்யா விட்டால் அவர்கள் மரணிக்கும் வரை வெள்ளைச் சட்டை தான் அணிய வேண்டும்: வெள்ளைச் சேலை தான் அணிய வேண்டும் என்ற நம்பிக்கை சமுதாயத்தில் நிலவுகிறது. இதுவும் மூட நம்பிக்கையாகும்.
இத்தா காலம் முடிந்து விட்டால் ஒரு கன்னிப் பெண்ணைப் போல் எல்லா விதமான ஆடைகளையும் கணவனை இழந்த பெண்களும் அணியலாம். விதவைகள் காலமெல்லாம் வெள்ளை உடை அணிய வேண்டும் என்பது பிற மதத்திலிருந்து நுழைந்து விட்ட தவறான நம்பிக்கையாகும்.
மறுமணத்தைத் தடுக்கக் கூடாது
கணவனை இழந்த நடுத்தர வயதுப் பெண்கள் மறுமணம் செய்வதை சமுதாயம் இழிவாகக் கருதுகிறது.
தனக்கு மறுமணம் அவசியம் என்று எண்ணுகிற பெண்கள் கூட வெட்கப்பட்டு அதைத் தவிர்க்கும் அளவுக்கு கேலியும், கிண்டலும் செய்யப்படுகிறது.
தவறான நடத்தையில் ஈடுபடுவதற்குத் தான் வெட்கப்பட வேண்டும். திருமணம் செய்வதற்கு வெட்கப்படத் தேவையில்லை. அல்லாஹ் அனுமதித்ததைத் கேலி செய்பவர்கள் மறுமையில் குற்றவாளிகளாக நிற்க வேண்டும் என்பது பற்றி அஞ்ச வேண்டும்.
நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்! அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்.
திருக்குர்ஆன் 4.19
பெண்களை விவாக ரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.
திருக்குர்ஆன் 2:232
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
திருக்குர்ஆன் 2:234
அல்லாஹ்வுடைய எச்சரிக்கைக்கு அஞ்சி சமுதாயம் நடந்து கொள்ள வேண்டும்.
பீ.ஜைனுல் ஆபிதீன்
No comments:
Post a Comment